ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே பேரறிவாளன் வழக்கில் குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது, எனவே பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பிலும் பேரறிவாளன் தரப்பிலும் எழுத்துப்பூர்வமாக வாதங்கள் இன்று (மே 13) தாக்கல் செய்யப்படன.
மத்திய அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில் கூறியிருப்பதாவது: “ஏற்கெனவே மரண தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது. மேலும், தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பான மனு குடியரசுத் தலைவர் முன்பு பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 9 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு வேறு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை இந்த வழக்கின் குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவேதான், ஆளநர், குடியரசு தலைவரின் முடிவுக்காக அனுப்பியுள்ளார்.
இது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் தண்டனை பெற்றாலும் வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு ஆகும். மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரித்து இருக்கும்போது, இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே தற்போது இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. எனவே, பேரறிவாளன் விடுதலை செய்யக் கோரியுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல, பேரறிவாளன் தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில் கூறியிருப்பதாவது: அமைச்சரவை தீர்மானத்தின் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்க ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு முரணானது. மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர். அவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக அவர் முடிவெடுக்கவோ, செயல்படவோ முடியாது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ன் கீழ் தண்டனை பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் என்ற மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டால், இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் சட்டப்பிரிவு 161-ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாகிவிடும்.
எனவே, உச்ச நீதிமன்றம் தனக்கான தனிப்பட்ட அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி முன்னர் பல வழக்குகளில் முடிவெடுத்ததுபோல, பேரறிவாளன் வழக்கிலும் முடுவெடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“