சென்னை: இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக்கியதுதான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். போர் முடிந்த பிறகும், 2 லட்சம் படைகள் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் நிலையான அமைதி ஏற்படாது.
தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள், மக்கள் உள்ளிட்ட 8 கோடி தமிழர்கள் உட்பட 130 கோடி இந்திய மக்களும் இலங்கை தமிழர்களின் உரிமை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஒருங்கிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு, மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் ராணுவத் தளபதிகள் என அனைவரும் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் மூலம் நடத்த வேண்டும்.
கண்காணிப்புக் குழு
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் அங்கு இருக்க கூடிய தமிழர்களுக்குச் சென்று சேருகிறதா என்பதை தூதரகங்களின் மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து அனுப்பக் கூடிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி தமிழக அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் இருக்கக் கூடிய மலையகத் தமிழ் மக்களின் வாழ்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டிக்கொடுத்த சிறிய வீட்டில், இடிந்து விழுமோ என்ற பயத்துடன்தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே,மலையகத் தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த வேண்டும்.
சீறாமல் கடிக்கும் பாம்பு
ரணில் விக்ரமசிங்க மோசடியில் ஈடுபட்டவர். ஏற்கெனவே மக்களை ஏமாற்றியவர். மகிந்த ராஜபக்ச சீறி கடிக்கும் பாம்பு என்றால், ரணில் விக்ரமசிங்க சீறாமல் கடிக்கும் பாம்பு.
மத்திய வங்கியில் கோடான கோடி ஊழலில் ரணில் விக்ரமசிங்க பெயர் உள்ளது. அவர், தமிழர்களுக்கு விரோத மானவர். சிங்கள இனவாதம்தான் அவரிடம் மோலோங்கி இருக்கும்.
இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.