உதய்பூர்: ‘‘நாட்டின் அமைதியை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைக்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸின் 3 நாள் ‘‘சிந்தனை கூட்டம்’’ நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். இப்போது கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் சுயவிருப்பங்களை புறந்தள்ளி, கட்சியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காலத்துக்கு ஏற்ப கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை. கட்சியின் உள்கட்டமைப்பில், அன்றாட செயல்பாட்டில் மாற்றங்களை அமல் செய்ய வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை வலுப்படுத்த முடியும்.
பாஜக ஆட்சியில் பதற்றமும் பயமும் அதிகரித்து வருகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை தூண்டப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் உயரிய கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. நாட்டின் ஓர் அங்கமான சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதை பற்றி கவலைப்படாமல் நாட்டின் அமைதியை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த மவுனம் காக்கிறார்.
எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏவி விடப்படுகின்றன. தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்தவர்களை பாஜக பாராட்டுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டின் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.
ரயிலில் சென்ற ராகுல்
கூட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் டெல்லியில் இருந்து ரயில் மூலம் உதய்ப்பூருக்கு புறப்பட்டனர். சேட்டக் எக்ஸ்பிரஸில் காங்கிரஸ் முன்பதிவு செய்த தனிப் பெட்டியில் இவர்கள் பயணம் செய்தனர்.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஹரியாணா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் மற்றும் கோஷ்டிகளுக்கு உள்ள பலத்தை காட்டுவதாகவும் இது இருந்தது. சில ரயில் நிலையங்களில் சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இயன்றவரை தொண்டர்களிடம் இருந்து மாலைகளையும் ரோஜா பூக்களையும் ராகுல் பெற்றுக் கொண்டார்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு சித்தோர்கர் ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். அங்கு பொதுமக்களை, பெரும்பாலும் இளைஞர்களை அவர் சந்தித்தார். ரயில் நிலையத்தில் சுமை தூக்குவோரிடமும் ராகுல் பேசினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ரயிலில் இருந்து ராகுல் இறங்கி வந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்பதை காண முடிகிறது. ராகுல் அண்மையில் நேபாளத்தில் இரவு விடுதி ஒன்றில் நடந்த விருந்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் முயற்சியாக இந்த ரயில் பயணம் பார்க்கப்படுகிறது.
ராகுலின் அந்த வீடியோவை பாஜக முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மக்களுடன் மீண்டும் இணைய ரயில் பயணம் உதவும் என அவரது ஆலோசகர்கள் அவரிடம் தெரிவித்ததாக கூறப் படுகிறது.