சென்னை: சென்னையில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது என்று காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழக முதல்வர் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவரும் விளையாட்டு ஆர்வலருமான விஜய் அமிர்தராஜிடம் அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, துறையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
விரைவில், ஜூலை 28-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கக்கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. அகில இந்திய சதுரங்க கூட்டமைப்போடு, தமிழக அரசு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவிருக்கின்ற சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறுவதையொட்டி, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக மறுசீரமைத்து தரம் உயர்த்த நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.