திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலப் பணிக்கு நிலம் கிடைக்காததால், கடந்த 8 ஆண்டுகாலமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டு எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.
இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எங்களுடைய முயற்சியால் பத்தாண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலப் பணிகள் ஆரம்பமாகியிருக்கிறது. இன்னும் 3 மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவு பெறும். எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதுக்கு வேற எந்த சமாச்சாரமும் இல்லை. அதனால பேருந்து கட்டணம், மின்சாரக் கட்டணம் உயரப் போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. பேருந்து கட்டணம் உயர்வு குறித்து தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் முடிவு செஞ்சு சொல்லுவாங்க. எந்த கட்டணம் உயர போகிறது என்று எனக்கு தெரியாது.
சென்னையில் சொத்து வரி உயர்த்தி 22 வருஷம் ஆச்சு. மற்ற ஊர்களில் 13-14 வருஷம் ஆச்சு. இதனால உள்ளாட்சி நிர்வாகமே சுத்தமே அடிபட்டுப் போச்சு. பலபேர் வரியே கட்ட மாட்டேங்குறாங்க. 4 மாடி கட்டிட்டு 2 மாடிக்கு வரி கட்டுறாங்க. நகராட்சி சொந்த வருவாயை பெருக்கி மக்களுக்கு வசதி செய்யத் தான் நினைக்கிறோம். அதுக்காகத் தான் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு செய்யப்பட இருக்கு. மத்தபடி மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்றதுக்காக எல்லாம் இல்லை.
திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலைய நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டது. திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்.” என்றார்.
அதையடுத்து, ‘திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயரை வைத்தால் நாங்கள் கலெக்டரை இயங்க விட மாட்டோம்’ என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே!’ என செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “ஏன் என்ன… கைய கால கட்டிடுவாங்களா!… முதல்வர் கூப்பிட்டு கலைஞர் பெயர் வைக்கும் அந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிட்டாரு.
இன்னும் அந்தத் தெரு பழைய பேர்ல தான் இருக்கு. வேற எந்தச் சமாச்சராமமும் கிடைக்கலைன்னு அண்ணாமலை தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காரு. எந்த தனிநபரும் அரசாங்கத்தோட செயல்பாட்டை நிறுத்தி வைக்க முடியுமா!… அரசுப் பணியை, அரசு அலுவலர்கள் பணியை அப்படி தடுத்தால் அதற்குரிய வழக்குகளை அவர்கள் சந்திக்க நேரிடும்” என்றார்.