சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது: காவல்துறை

சென்னை: சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி, நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1 பெண் உட்பட 10 குற்றவாளிகளை போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022 ஜன.1-ம் தேதி முதல் 2022 மே 13-ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 82 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 26 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 4 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 1 குற்றவாளி, சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 117 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த கடந்த மே 7-ம் தேதி முதல் மே-13-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள், வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள், வீடு புகுந்து திருடிய 1 குற்றவாளி, மத்திய குற்றப்பிரிவின் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி, மோசடி புலனாய்வு பிரிவில் சம்பந்தப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 10 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.