போபால்: உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது நேற்று முன்தினம் முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய பதிவாளர் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, உ.பி. மதரஸாக்களில் தேசிய கீதம்பாடுவது அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ம.பி. மதரஸாக்களிலும் தேசிய கீதம் கட்டாயமாக்க பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் பதில் கூறுகையில், “இது நல்ல விஷயம். மத்திய பிரதேசத்திலும் அவ்வாறு கட்டாயம் ஆக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.
இந்த விவகாரத்தில் மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா கூறும்போது, “தேசிய கீதம் பாடும்படி பாகிஸ்தானில் உள்ளவர்களை கேட்கவில்லை. உ.பி., ம.பி. மற்றும் நாட்டின் அனைத்து மூலைகளில் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். பாரத மாதாவுக்கு ஜே என்ற முழக்கம் எழுப்ப வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அது நடந்தால் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார்.