இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர்
கோத்தபய ராஜபக்சே
மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் குற்றச்சாட்டின. மேலும், ஆட்சியில் இருந்து ராஜபக்சே குடும்பம் விலக வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். தொடர்ந்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அண்மையில், இலங்கையின் புதிய பிரதமராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
இந்நிலையில் இன்று, புதிதாக 4 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அவர்களுக்கு அதிபர்
கோத்தபய ராஜபக்சே
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிசும், பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு இலங்கை புதிய பிரதமர் விக்ரமசிங்கே நன்றி!
இதேபோல், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், சக்தி மற்றும் ஆற்றல் அமைச்சராக காஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.