நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேடை ஏறிய 82 வயது கவுண்டமணி: அபூர்வ வீடியோ

Tamil Cinema Update : தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் கவுண்டர்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள கவுண்டமணி காமெடி குணச்சித்திரம் ஹீரோ என பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் செந்திலுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று பெயரெடுத்த நடிகர் கவுண்டமணி, கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் நாளுக்கு நாள் அவரின் காமெடி காட்சிகள் மற்றும் அவரின் புகைப்படம் பதித்த மீம்ஸ்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருகிறார். தனது நகைச்சுவை திறன் மூலம் அனைவரையும் தன்வசப்படுத்திய கவுண்டமணி படங்களில் நடிக்காதது சற்று கவலையை தருகிறது

ஆனால் இந்த கவலைக்கு மருந்து போடும் விதமாக நடிகர் கவுண்டமணி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன், 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அவரது திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் ஐசரி வேலன் சிலையை திறந்து வைத்தார். தென்னிந்திய திரையுலகை சேர்த்த பல்வேறு நடிகர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் கவுண்டமணியை பார்த்ததும் அனைவரும் உற்சாகமடைந்தனர். கவுண்டமணி மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுப்பது போன்ற இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவுண்டமணி தனக்கே உரிய பாணியில், எல்லாருக்கும் தனித்தனியா சொல்லிட்டு இருக்க முடியாது, அரங்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நானும் ஐசரி வேலனும் ஒன்றாக நாடகம் எழுதி பல இடங்களில் நாடகம் நிகழ்த்தினோம். இதில் மறைந்த எம்ஜிஆர் பல நாடகங்களுக்கு தலைமை தாங்கினார். அதன்பிறகு இருவரும் சினிமாவில் நடிக்க சென்றோம்.

அப்போது ஒருநாள் ஐசரி வேலன் மறைந்துவிட்டார் என்ற வெடிகுண்டு ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. அவரது குடும்பத்திராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவது மகன் ஐசரி கனேசன் அவருக்கு சிலை செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது மகனும் வானளவு வளர வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன், ராதிகா, பிரபு, பாக்யராஜ், பிரஷாந்த், லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றாலும், நடிகர் கவுண்டமணியின் எண்ட்ரி அணைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. வயதாகிவிட்டது நடக்க முடியவில்லை என்றாலும் அவரின் கவுண்டர் பேச்சு இன்னும் குறையவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.