பணிகளை தொடங்கினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு :

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது பணிகளை தொடங்கி உள்ளார். அவரது தலைமையிலான மந்திரி சபையில் இணைய எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன.

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனாலும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் அடுத்தடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் (வயது 73) பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கே, 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவர் நேற்று தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற போதும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

புதிய பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியிருப்பதால் நாட்டின் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ஆளும் இலங்கை மக்கள் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அவர் எளிதாக மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் அவரின் நியமனத்துக்கு எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எஸ்.ஜே.பி. கட்சி தெரிவித்து உள்ளது.

பிரதமர் விக்ரமசிங்கேவுக்கு அரசு அமைப்பதற்கான ஆதரவு இல்லாததால், புதிய அரசில் அமைச்சுப் பதவிகளை எஸ்.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக்கூறியுள்ள அந்த கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணிலுக்கு சவால் விடுத்துள்ளது.

எனினும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீட்டெடுக்கும் வகையில் வகுக்கப்படும் பொருளாதார கொள்கைகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்றும் இந்த கட்சிகள் தெரிவித்து உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.