திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அம்மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த
பிப்லப் குமார் தேப்
, தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவிடம் வழங்கினார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிப்லப் குமார் தேப், “கட்சி எல்லாவற்றிற்கும் மேலானது. நான் பாஜகவின் விசுவாசி. பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் சரி அல்லது திரிபுரா முதல்வராக இருந்தாலும் சரி, எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்துள்ளேன் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நான் உழைத்தேன்” என தெரிவித்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்லப் குமார் தேப் ராஜினாமா, மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து இன்று, அகர்தலாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக – எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக, அம்மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மாணிக் சாஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மாணிக் சாஹாவுக்கு, பிப்லப் குமார் தேப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
யார் இந்த மாணிக் சாஹா?
பல் மருத்துவரான மாணிக் சாஹா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு திரிபுரா மாநில பாஜக தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டார். மேலும், திரிபுரா மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் மாணிக் சாஹா உள்ளார். தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ஹபனியா என்ற இடத்தில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.