TNPSC group 2 exam last minute preparation tips for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு வரும் சனிக்கிழமை (மே 21) நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர தயாரிப்பு மூலம் தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்துகிறது. குரூப் தேர்வில் தற்போது முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வு தகுதி தேர்வு என்றாலும், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும். எனவே என்னதான் கஷ்டப்பட்டு இதுவரை படித்திருந்தாலும், கடைசி நேரத்தில் எவ்வாறு படிக்க வேண்டும், தேர்வில் எப்படி செயல்பட வேண்டும் என தெரியாமல் பலர் கோட்டை விட்டு வருகின்றனர். எனவே கடைசி கட்ட தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என இப்போது பார்ப்போம்.
தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இந்த பகுதி எளிமையானது மற்றும் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடியது. எனவே, நீங்கள் ஏற்கனவே நன்றாக படித்திருந்தாலும், திருப்புதல் என்பது முக்கியமானது, ஏனெனில் சிலபஸூக்கு ஏற்றவாறு படித்தவற்றை திருப்பி பார்க்காமல் போனால், தேர்வில் குழப்பம் ஏற்பட்டு தவறாக விடையளிக்க வாய்ப்பு உண்டு. எனவே இந்த பகுதிகளை தினமும் கண்டிப்பாக திருப்பி படித்து வர வேண்டும்.
இதேபோல், திறனறி வினாக்கள் மற்றும் கணித வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். மேலும் தினமும், ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். கூடுதலாக பொது அறிவு பகுதிக்கு, சிலபஸில் கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு பாடத்தை திருப்பி படித்து வர வேண்டும். இதில் 8 (தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு) மற்றும் 9 (தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம்) ஆம் அலகுகளுக்கு (யூனிட்) கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அடுத்ததாக அரசியலமைப்பு மற்றும் இந்திய தேசிய இயக்கம் பாடங்களை படிக்க வேண்டும்.
ரிவிஷன் செய்வதற்கு ஏற்ற முறை குரூப் ஸ்டெடி (கூட்டாக படிப்பது) தான். எனவே முடிந்தவரை நன்றாக படிக்க கூடியவர்களுடன் சேர்ந்து ரிவிஷன் செய்வது சிறந்தது. ரிவிஷன் செய்யும்போது வரி, வரியாக படிக்க கூடாது, நீங்கள் ஏற்கனவே படித்துள்ளதால், முக்கியமானவற்றை மட்டும் படிக்க வேண்டும். அதிலும் தரவுகளாக படிக்க வேண்டும். அதேநேரம், உங்களுக்கு நன்றாக தெரிந்த தரவுகளை படிக்காமல், உங்கள் நினைவில் இல்லாத தரவுகளாக தேடித் தேடி படிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: எழுத்துத் தேர்வு இல்லை: தபால் துறையில் 38,926 பேர் பணி நியமனம் எப்படி?
சிலபஸ் முழுவதையும் கவர் செய்து விட்டோமா என்பதை கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை இனிமேல் புதிதாக எதையும் படிக்க வேண்டும். ஏற்கனவே படித்ததை சரியாக திருப்பி படித்துக் கொள்ளுங்கள். கணித பகுதிகளை தினமும் படிக்காமல், பயிற்சி செய்து பாருங்கள். தினமும் ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு படித்தால், நீங்கள் இதுவரை படித்தது உங்கள் நினைவுக்கு வருவதோடு, தேர்வில் குழப்பமில்லாமல் விடையளிக்க முடியும். எனவே இருக்கின்ற குறைவான நாட்களை பயனுள்ள நாட்களாக மாற்றி தேர்வுக்கு முழுவீச்சில் தயாராகுங்கள். தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதன்மை தேர்வுக்கு தேர்வாகுங்கள்.