திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் அதிகளவான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். மேலும், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர மோர், குடிநீர், மருத்துவ வசதிகளை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் நான்கு மாடவீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிங் பெயிண்ட், சிகப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேய சுவாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் விரைவில் பக்தர்களுக்கு கிடைக்க செய்யப்படும். இது தேவஸ்தான இணையதளத்திலும் பக்தர்களுக்கு கிடைக்கும். ஏழை பிள்ளைகளின் திருமணத்தின் நிதிச்சுமையை குறைக்க ஏழுமலையான் ஆசீர்வாதத்துடன் இலவச திருமணங்களை நடத்தும் கல்யாணமஸ்து திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்கு மே 21ம் தேதி முதல் மகா கும்பாபிஷேக யாகமும், 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதேபோல் ஜம்மு, சீதன்பேட்டை, அமராவதி ஆகிய இடங்களிலும் கோயில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் கட்டுவதற்காக மகாராஷ்டிரா அரசு நன்கொடையாக வழங்கிய 10 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்களை மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே சமீபத்தில் தலைவரிடம் ஒப்படைத்தார். எனவே விரைவில் அங்கு கோயில் கட்டும் பணிக்கு பூஜை செய்து தொடங்கப்படும். உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு பரகாமணியில் ₹18 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி வருகிறோம். மூன்று மாதங்களில் இக்கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.