பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புறநோயாளிகள் பிரிவின் அருகில் இருந்த மின்மாற்றிகளில் உள்ள ஆயில் டேங்குகளில் திடீரென தீப்பற்றியது. அவை வெடித்ததில் அருகில் உள்ள மருத்துவமனைக் கட்டடத்திலும் தீப்பற்றியது.
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மேலும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை அடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 8 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர். கோடைக் காலத்தில் அதிக வெப்பம் காரணமாக மின்மாற்றியில் உள்ள ஆயில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்று, பஞ்சாப் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பூ, என்ன நடக்கிறது? நேற்று டெல்லி, இன்று பஞ்சாப் என கேள்வி எழுப்பியுள்ளார்.