திமுக உட்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முடித்த கையோடு உட்கட்சித் தேர்தலுக்கான பணியில் இறங்கியுள்ளது. தற்போது நகர தலைவர், பேரூர் கழக பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கொங்கு மண்டலத்தில்தான் அதிக பிரச்னை வெடித்தது. இப்போது உட்கட்சித் தேர்தலின்போதும் கொங்கு திமுக தகிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர செயலாளராக இருப்பவர் தனசேகர். தற்போது உட்கட்சித் தேர்தலில் நகர செயலாளர் பதவிக்கு தனசேகருடன், நகர இளைஞரணி அமைப்பாளர், நகர்மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக கட்சி தேர்தலில் இளைஞரணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அந்த வகையில் தாராபுரம் நகர செயலாளர் பதவியும் இளைஞரணிக்கு கொடுக்கப்படுவதாக மேலிடத்தில் இருந்து தகவல் கசிந்தது.
இதில் தனசேகர் மற்றும் அவரது ஆதரவாளரகள் அப்செட் ஆகினர். இதையடுத்து தாராபுரம் நகரத்தில் உள்ள 82 கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். மேலும் 18 கவுன்சிலர்கள் தனசேகரையே மீண்டும் நகர செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கடிதம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து தனசேகர் ஆதரவாளர்கள் கூறுகையில், “இவர்தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக நகர செயலாளராக இருக்கிறார். இங்கு கட்சியை நன்கு வளர்த்திருக்கிறார். அவருக்குத்தான் பெரும்பான்மையும் இருக்கிறது.
திடீரென்று உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என சொல்லி ஒருவருக்கு, நகர செயலாளர் பதவி கொடுக்க போவதாக சொல்கின்றனர். இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சி உழைப்பவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மீண்டும் தனசேகருக்கே நகர செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்.” என்றனர். இதேபோல, திருப்பூரில் பல்வேறு இடங்களில் திமுக உள்கட்சி தேர்தல் பஞ்சாயத்து வெடித்து வருகிறது.