தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி எனும் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்களுக்கு சொந்தமான சுமார் 2,117 ஏக்கர் விவசாய நிலத்தை, புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன் தாஸ், முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலத்தில் 600-க்கும் மேற்பட்ட தனிநபர் வீடுகள், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான விவசாயப் பட்டா நிலங்கள், கோயில்கள், குளங்கள், அரசு அலுவலகங்கள், காற்றாலைப் பண்ணைகள் போன்ற உள்கட்டமைப்புகள் உள்ளன.
வடசிலுக்கன்பட்டியில் 1043.37 ஏக்கரும், தெற்கு சிலுக்கன்பட்டியில் 1073.56 ஏக்கரும் தனக்குச் சொந்தமாக இருப்பதாகக் கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த டி.எஸ்.செந்தில் ஆறுமுகம் சமீபத்தில் அந்த நிலத்தை கோவையைச் சேர்ந்த அன்புராஜ் கிஷோருக்கு விற்க முயன்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்து ஊர்மக்கள், பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில், புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த, தமிழக பதிவுத் துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி மேற்பார்வையில், தூத்துக்குடி ஏஐஜி பால்பாண்டி விசாரணையைத் தொடங்கினார்.
இதில், விவசாய நிலங்கள் முறைகேடாக தனிநபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து, பதிவுத்துறை திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி உத்தரவிட்டார்.
அத்துடன், முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டது. புதுக்கோட்டை சார் பதிவாளர் பொறுப்பை, ஏரல் சார் பதிவாளர் வள்ளியம்மாள் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“