டெல்லி: டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்திலேயே முதலில் தீ பற்றியதாக தீயணைப்புத்துறை தகவல் கூறியுள்ளது. டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இதுவும் ஒன்று என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த போது கட்டிடத்தின் 2வது தளத்தில் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததாகவும், அந்த தளத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து தொடர்பாக கட்டிடத்தில் இருந்து சிசிடிவி கேமரா அலுவலகத்தை சேர்ந்த அரிஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.