ஐ.எஸ். பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றது முதல் அந்த நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர்.
ஆனால் அதற்கு நேர்மாறாக தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மசூதியில் குண்டு வெடித்தது
குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் காபூலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் மதியம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் மசூதியில் திரண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
7 பேர் உடல் சிதறி பலி
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பால் மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனால் வானுயுரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.