வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-டில்லியில், வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 27 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், 29 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள நான்கு மாடி வணிக வளாகத்தில், நேற்று முன்தினம், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்து, 27 பேரின் உடல்களை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களில் ஏழு பேரின் அடையாளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீயில் கருகி உடல் உருக்குலைந்து இருப்பதால், அடையாளம் கண்டறியும் பணி சவாலாக இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தீ விபத்து நடந்தபோது, வணிக வளாகத்தில் இருந்த, மேலும் 29 பேர், காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ”உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, தலா, 10 லட்சம் ரூபாயும்; காயமடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும்,” என, முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
Advertisement