சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடிக்கிறது.
இந்த நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனியாஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், எனினும் சில ஏவுகணைகள் ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் விளக்கமோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை.