கமலின் புது விக்ரம் : லிசியின் வருத்தமும் மகிழ்ச்சியும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம், வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு முன்பு இதே டைட்டிலில் கமல் நடித்த விக்ரம் படம் வெளியான போது ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உருவான ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படம் என்றுகூட சொல்லப்பட்டது. இந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் ஒருவர் நடிகை லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை திருமணம் செய்துகொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற லிசி, தற்போது சென்னையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கான மிகப்பெரிய ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். விக்ரம் படத்தின் ஒலிக்கலவை சேர்ப்பு பணிகள் இங்கே தான் நடைபெற்றன.
இந்தநிலையில் இந்த படம் குறித்து லிசி கூறும்போது, “நான் 17 வயதாக இருக்கும்போது விக்ரம் படத்தில் நடித்தேன். மிகப்பெரிய ஹீரோவான கமல்ஹாசன் மற்றும் கிரேக்க ராணி போன்ற பாலிவுட் கதாநாயகி டிம்பிள் கபாடியா ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அது மிகப்பெரிய கனவு போலவும் அற்புதமாகவும் இருந்தது. இப்போது அதே டைட்டிலில் மீண்டும் கமல் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தரவில்லை என்பதில் எனக்கு வருத்தமே.
அதே சமயம் என்னுடைய ஸ்டுடியோவில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றது என்பதால் நானும் இந்த படத்தில் பங்கு கொண்டது போன்ற மகிழ்ச்சியும் எனக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய விக்ரம் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படம் அருமையாக வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.