கடலின் சூழலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையம் கட்டப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு வருகைத்தர நினைக்கும் மக்கள் இன்னும் சில மாதங்களில் லைட் ஹவுஸ் மெட்ரோ நிலையத்தின் மூலம் எளிதாக பயணிக்கலாம்.
300 மீட்டருக்கு மேல் கட்டப்படும் இந்த நிலையத்தில், பயணிகளால் இரண்டாம் தளம் வரை சென்று பயணிக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையத்தின் மாடலில், பிளாட்பாரம் மற்றும் மினி-கான்கோர்ஸ்ஸை புதுவிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுவே சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் (CMRL) முதல் ஆழமற்ற நிலத்தடி ரயில் நிலையமாக இடம்பெறவுள்ளது. மேலும், CMRL தனது நிலத்தடி நிலையங்களின் வழக்கமான கட்டிடத் திட்டத்தை கைவிடுவதில் இதுவே முதல் முறை.
இந்த மெட்ரோ நிலையம், லைட் ஹவுஸ் மற்றும் பூந்தமல்லிக்கு இடையே வரும் ஒரு முக்கியமான நிலையமாக இடம்பெறும். மேலும், இந்த நிலையம் கட்டப்பட்டபின், மெரினா கடற்கரைக்கு வருகைத்தரும் மக்களால் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் பயணிக்கமுடியும். இந்த நிலையத்தின் கட்டுமானத்திற்கு தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) அனுமதியை CMRL பெற்றுள்ளது.
CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, கடலின் சுற்றுசூழல் பாதிக்கப்படாமல் இருக்க 20 மீட்டர் ஆழத்திற்கு பதிலாக அதிகபட்ச ஆழமாக 15 மீட்டருக்குள் இந்த மெட்ரோ நிலையத்தை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கன்கோர்ஸ் இரண்டாவது தளத்திலும், நடைமேடை முதல் தளத்திலும் இடம்பெறவுள்ளது, அதனின் ஆழம் சுமார் 12 மீட்டருக்கு கட்டவுள்ளனர். இதற்குக் காரணம் என்னவென்றால், 12 மீட்டருக்குக் கீழே துளையிடுவதற்கு அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தப்போறதில்லை என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இந்த நிலையத்தின் நுழைவுவாயில் குயின் மேரி கல்லூரிக்கு அருகிலும், மற்றொரு வாயில் லைட் ஹவுஸுக்கு அருகிலும் கட்டப்படவுள்ளது.
மேலும் கான்கோர்ஸின் அளவு சுமார் 70-80 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை போல கட்டப்படும். நுழைவு வாயிலின் கட்டமைப்புகள் கடற்கரைக்கு வருகைதரும் மக்களை கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாட்பாரத்தின் நீளம் 140 மீட்டராகவும், முழு மெட்ரோ நிலையத்தின் நீளம் சுமார் 300 மீட்டர் ஆக வரும்பட்சத்தில், ரயில்கள் தண்டவாளங்களுக்கு இடையில் மாறுவது போன்ற வசதிகளும் செய்துதரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கனமழை அல்லது வெள்ளம் ஏற்பட்டால், நுழைவுவாயிலின் கட்டமைப்புகளில் வெள்ள வாயில்களும் சேர்க்கப்படும். நிலையத்திற்குள் நீர் கசிவு ஏற்பட்டால், அதை வெளியேற்ற சம்ப்கள் கட்டப்படும். கடற்கரையின் மண் நிலத்தடி ரயில் நிலையம் கட்டுவதற்கு சில இடையூறுகளை குடுக்கக்கூடும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மற்றொரு அதிகாரி கூறுகிறார்.
மண் சரிவு ஏற்படாதவாறு இருக்க அகழி உருவாக்கி, பெண்டோனைட்டின் அடர்த்தியை (கட்டுமானத்தில் பிணைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படும் பொருள்) அதிகரித்து, அதன்மூலம் கான்கிரீட் செய்து வலுப்படுத்தவிருப்பதாக இருக்கின்றனர்.