KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

கடந்த முறை பத்து அணிகள் இடம்பெற்ற சீசனில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகள் தற்போது தலைகீழ் மாற்றமாக ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டு வருகின்றன. முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்தான் இந்த சீசனில் முதலில் வெளியேறியவை. அடுத்த இரண்டு இடங்களில் இருந்த பெங்களூருவும், கொல்கத்தாவும் அடுத்தடுத்து வெளியேறுமோ என எதிர்பார்த்த நிலையில், அதேபோல பெங்களூரு தோற்று ஊசலாட, கொல்கத்தா மட்டும் இன்னும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என பிளேஆஃப் கதவைத் தொட முயன்று கொண்டிருக்கிறது.

நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா, ஐதராபாத் இரண்டுக்குமே இன்னும் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது என்றாலும், ஒரு அணி தொடர் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்க இன்னொரு அணியோ அதன் திறமைக்கேற்ப இதுவரையில் விளையாடவில்லை என்கிற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சீசனின் 36வது போட்டிதான் ஐதராபாத் கடைசியாக வென்றது. நேற்று ஐதராபாத் விளையாடியது சீசனின் 61வது போட்டி. தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வென்று, பின்பு தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்றிருக்கிறது.

மறுபுறம், கொல்கத்தா இந்த சீசனில் ஐந்து முறை தன்னுடைய தொடக்க இணை ஆட்டக்காரர்களை மாற்றியிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர் & ரஹானே, ஆரோன் ஃபின்ச் & இந்திரஜித், ஃபின்ச் & வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ் & சுனில் நரைன், ஃபின்ச் & நரைன் என எப்படி எப்படியோ தொடக்க வீரர்களை மாற்றியாயிற்று. ஆனால், இந்த சீசனில் ஒட்டுமொத்தமாகவே ஒருமுறைதான் 50 ரன்களை விக்கெட் இழக்காமல் கொல்கத்தா அடித்திருக்கிறது. காயங்கள் ஐதராபாத்தை துரத்துகிறது என்றால், கொல்கத்தாவிலோ ஃபார்ம் அடி வாங்கிக்கொண்டிருந்தது.

Marco Jansen | KKR v SRH

ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பின்னர் வந்திருந்த ஐதராபாத் அணியில் மீண்டும் நடராஜனும், சுந்தரும் இருந்தார்கள். தன் நூறாவது ஐபில் போட்டியை விளையாடிய ஸ்ரேயாஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

கொல்கத்தா பிளேயிங் XI: வெங்கடேஷ், அஜிங்கிய ரஹானே, ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ரஸல், நரைன், உமேஷ், சவுத்தி, வருண்

ஐதராபாத் பிளேயிங் XI: அபிஷேக், கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, மர்க்ரம், பூரன், சஷாங் சிங், சுந்தர், புவி, உம்ரான் மாலிக், நடராஜன், மார்க்கோ ஜேன்சன்

இந்த சீசனில் கொல்கத்தாவுக்காக ஒருமுறை 50+ ரன்கள் அடித்த இணையான வெங்கடேஷும் ரஹானேவும் ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசினார் புவி. மிட் ஆஃபில் வெங்கடேஷ் அடித்த ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 9 ரன்கள் வந்திருந்தன. அடுத்து ஜேன்சன் வீசிய ஓவரில் ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸை புல் செய்தார் ரஹானே. ‘அடேங்கப்பா’ எனப் பாராட்டி முடிப்பதற்குள் அதே ஓவரில் வெங்கடேஷ் அவுட். அவுட்சைட் ஆஃபில் வீசப்பட்ட ஷார்ட் பாலை, வெங்கடேஷ் தன் பேட்டை வைத்து, ‘சும்மா போன பந்தை ஸ்டம்புக்குள் விட்ட கதையாக’ உள்ளே திருப்பிவிட்டு அவுட்டானார். ஒன் டவுனில் வந்தார் ராணா. நடராஜன் வீசிய முதல் பந்திலேயே மிட் ஆஃப் பக்கம் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்து மிட் ஆனில் ஒரு சிக்ஸ். அடுத்து ஷார்ட் ஃபைன் லெக்கில் இன்னொரு சிக்ஸ் என ஒரே ஓவரில் 18 ரன்கள். அடுத்த ஜேன்சன் ஓவரில் ரஹானே, ராணா இருவருமே ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடிக்க, பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

ரஹானே | KKR v SRH

அடுத்து வந்தார் ஐபிஎல்லின் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக். வந்த பந்தை டீப் ஸ்கொயர் லெக் பக்கம் திருப்பினார் ராணா. பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த சஷாங் சிங் வேகமாக முன்னே வந்து பந்தைப் பிடித்து ராணாவை வெளியே அனுப்பினார். ராணா சென்றதும் உள்ளே வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அதே ஓவரில் ரஹானேவை அவுட் செய்ய சஷாங் பிடித்தது ஓர் அட்டகாசமான கேட்ச். 146 கிமீ வேகத்தில் வந்த பந்தை அப்பர் கட் அடித்து சிக்ஸராக்க முயன்றார் ரஹானே. ஆனால் அந்தப் பந்து ஸ்வீப்பர் கவரில் நின்றுகொண்டிருந்த சஷாங்கிடம் தஞ்சம் பெற்றது.

உம்ரான் மாலிக்கின் அடுத்த ஓவர் பந்துகளில் ஸ்ரேயாஸின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 147.8 கிமீ வேகத்தில் வந்த ஷார்ட் பந்தை ஃப்ளிக் செய்தார் ஸ்ரேயாஸ். அதை தாவிப் பிடித்து அவுட் செய்தார் ராகுல் திரிபாதி. பத்து ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எனத் தத்தளித்தது கொல்கத்தா.

நடராஜன் வீசிய இன்ஸ்விங் யார்க்கரை அடிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார் ரிங்கு. என்ன சொல்லலாம் எனப் பல நேரம் யோசித்த அம்பயர் இறுதியாக அரை மனதாக அவுட் என்றார். DRSக்கான நேரத்தில் ஓட்டல் மெனுகார்டில் விலைப்பட்டியலைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல மெதுவாக யோசித்துக்கொண்டிருந்தார் ரிங்கு. எல்லாம் யோசித்து ஆர்டர் சொல்லும்போது, ஹோட்டல் மூட வேண்டும் எனச் சொல்வது போல, ‘டைம் ஓவர், கிளம்புங்க’ என்றார் அம்பயர் சௌத்ரி. சாம் பில்லிங்ஸ் ரிவ்யூ கேட்டிருக்கார் என்றாலும், ஸ்டிரைக் நின்ற வீரர் அல்லவா கேட்க வேண்டும். மெக்கலமும் நான்காவது அம்பயரிடம் எல்லாம் பேசிப் பார்த்தார். எவ்ளோ பேசினாலும், ஒன்றும் நடக்காது என்பதாக ரிங்கு வெளியேற்றப்பட்டார்.

Shreyas Iyer | KKR v SRH

அடுத்து உள்ளே வந்தார் ரஸல். ரஸலும் பில்லிங்ஸும் இணைந்து ஓவருக்கு பத்து ரன்கள் எடுத்து ரன்ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார்கள். புவி வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் பில்லிங்ஸ் அவுட். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசினார் சுந்தர். சினங்கொண்ட சிங்கத்தின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டுவதும், ரஸலுக்கு ஃபுல் டாஸ் போடுவதும் ஒன்றுதான். எதற்காக ஃபுல் டாஸ் போட்டார் என்றே தெரியவில்லை. 87 மீட்டருக்கு ஒரு சிக்ஸ். அடுத்த முறை யார்க்கர் முயன்று, அதுவும் லோ ஃபுல் டாஸாகிப் போனது. அதே மிட் விக்கெட்டில் அதே மாடலில் இன்னொரு சிக்ஸ். இந்த சிக்ஸ் 84 மீட்டர். ‘யார்க்கர் முயன்றுதானே ஃபுல் டாஸானது, இந்த முறை ஃபுல் டாஸே போடுவோம், யார்க்கர் ஆனாலும் ஆகும்’ என நினைத்தாரோ என்னவோ, அவர் வீசிய ஃபுல் டாஸ், ஃபுல் டாஸாகவே சென்றது. அதே மிட் விக்கெட்டில் இன்னொரு சிக்ஸ். இந்த முறை 85 மீட்டர். இருபதாவது ஓவரில் இருபது ரன்களுடன் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

1120 பந்துகளைச் சந்தித்து ஐபிஎல்லில் 2000 ரன்களைக் கடந்தார் ரஸல். அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்து சேவக்கின் சாதனையை முந்தினார் அவர்.

இன்னும் நாம் ஐபிஎல்தான் ஆடுகிறோமா என்கிற குழப்பத்தில் இருக்கும் கேன் வில்லியம்ஸன் மீண்டும் அபிஷேக்குடன் ஓப்பனிங் இறங்கினார். சவுத்தி வீசிய முதல் ஓவரில் வில்லியம்சன் சந்தித்த மூன்று பந்துகளிலும் ரன்கள் எதுவும் இல்லை. பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசினார் ரஸல். ‘இப்ப பாருங்களேன் என்ன பண்றேன்’ன்னு என்பதாக, விலகிச் சென்று ஸ்கூப் அடிக்க முயன்றார். ஆனால், பந்து அதற்குள் ஸ்டம்பை பதம் பார்த்துவிட்டது. 17 பந்துகளில் 9 ரன்களுடன் போல்டாகி வெளியேறினார் வில்லியம்சன். நல்லா விளையாடிய வார்னரையே கூப்புல உட்கார வச்ச டீம்ங்க இது. இன்னும் கவனமாக ஆடலாமே வில்லி?!

Williamson | KKR v SRH

நரைன் பந்தில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து அமர்க்களப்படுத்தினார் அபிஷேக். வானத்தைத் தொட்டுவிட்டு வந்து 85 மீட்டரில் விழுந்தது அந்த சிக்ஸ். அரவுண்டு தி விக்கெட் வந்து பந்து வீசினார் நரைன். ஆனாலும், அதே ட்ரீட்மெண்ட்தான். 87 மீட்டரில் பறந்தது அடுத்த சிக்ஸ்.

Southee | KKR v SRH

சவுத்தி வீசிய பந்தை அவரிடமே, ‘சார், உங்க பந்து விழுந்திருச்சுன்னு நினைக்கறேன். இந்தாங்க வச்சுக்கோங்க’ என வந்த பந்தை அதே வேகத்தில் திருப்பிக் கொடுத்தார் ராகுல் திரிபாதி. கேப்டன் வழியில் இவரும் 9 ரன்களுக்கு அவுட். ஸ்பின்னர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடி வரும் அபிஷேக், அதே ஸ்பின்னரின் கைகளில் அவுட் ஆனதுதான் நேற்றைய சோகம். வருண் கொஞ்சம் மெதுவாக 95 கிமீ வேகத்தில் பந்தை வீச, அதை ஸ்வீப் அடிக்க முயன்று அது மிஸ்ஸாக பில்லிங்ஸும், வருணும் பந்தைப் பிடிக்க ஓடினர். கடைசியாக அதை பில்லிங்ஸ் பிடித்தார். உருப்படியாக விளையாடிக்கொண்டிருந்த அபிஷேக்கும் அவுட்.

KKR v SRH

சவுத்தியின் வேகப்பந்தில் நடந்த காட்சியை ஸ்பின்னுக்கு செய்தால் எப்படி இருக்கும் என ஒரு சின்ன கற்பனையை ஓட்டிப் பார்த்துக்கொண்டே பூரன் உள்ளே வந்திருப்பார் போல. நரைன் வீசிய பந்தை நரேனிடமே கொடுத்துவிட்டுச் சென்றார்.

‘அடிச்சா சிக்ஸ் மட்டும்தான்’ என்பதாக விளாசிக்கொண்டிருந்த மார்க்ரமை இன்சைட் எட்ஜ் முறையில் போல்டாக்கி வெளியேற்றினார் உமேஷ் யாதவ். 99 ரன்களில் ஐந்து விக்கெட் அவுட். தேவைப்படும் ரன் ரேட் குறித்த எந்த உணர்வும் இல்லாமல் ஒட்டுமொத்த ஐதராபாத்தும் விளையாடிக்கொண்டிருந்தது. ரஸல் வீசிய 18வது ஓவரில், இந்த முறை அடித்து பழி தீர்த்து விடுவது என யோசித்த சுந்தர் சிக்ஸுக்கு பந்தை அனுப்புவதாக நினைத்து அடித்தார். ஆனால், பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த வெங்கடேஷ் அதை எளிதாகப் பிடித்துவிட்டார். அதே ஓவரில் ஜேன்சனும் அவுட். ரஸல் ஓவர் முடிந்த போதே, இரண்டு ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது.

49 ரன்கள் அடித்ததுடன், 3 விக்கெட்டுகளையும் எடுத்த ரஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம், இன்னும் ஃபிளேஆஃபுக்குச் செல்லும் வாய்ப்பைத் தக்க வைத்திருக்கிறது கொல்கத்தா.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.