ஸ்டட்கார்ட்(ஜெர்மனி),
கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருப்பது, உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஜி7 தொழில்மயமான நாடுகளின் குழுவைச் சேர்ந்த விவசாயத்துறை மந்திரிகள் இந்தியாவின் இந்த முடிவை கண்டித்துள்ளனர்.
‘இதை போல, எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தால் அது நெருக்கடியை இன்னும் மோசமாக்கும்’ என்று ஜெர்மன் விவசாயத்துறை மந்திரி செம் ஓஸ்டெமிர், ஸ்டட்கார்ட்டில் செய்தியாளர் கூட்டத்தில் இன்று தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலகளாவிய விவசாய சந்தைகள் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் இச்சூழலில், இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று உலக நாடுகளை ஜி7 குழுவைச் சேர்ந்த விவசாயத்துறை மந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜி20 அமைப்பின் ஓர் உறுப்பினராக உள்ள இந்தியா, தனது பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்க வேண்டும் என நாங்கள் அழைக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்த விவகாரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.