புதுடெல்லி:
2014 பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களை சந்திக்கும் பயணத்தை மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பயணத்தின் பெரும் பகுதி பாத யாத்திரையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் அரசு ஊழியர் ராகுல்பட் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட பற்றி பிரதமர் மோடி பேசுவதை விட, இந்த வீடியோவிற்கு பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர், பாதுகாப்புக்கு பொறுப்பேற்று அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், பாஜகவின் கொள்கைகளால் இன்று காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் விலகல்