புதுடில்லி : மஹராஷ்டிராவில், ஆண் என்பதால் போலீஸ் வேலை மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, பணி ஒதுக்கீடு செய்யும்படி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாசிக்கில் ஊரக போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வுக்கு, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் தேர்வு பெற்றார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கருப்பை, கரு முட்டை உற்பத்தி இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு போலீஸ் பணி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து அந்த பெண், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தான் பிறந்தது முதல் பெண்ணாகவே வாழ்ந்து வருவதாகவும், உடற்கூறியல் குறைபாடுகளுக்கு தான் பொறுப்பல்ல எனவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் போலீஸ் கான்ஸ்டபிள் சாராத பணி தருவதாக, மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற மும்பை உயர் நீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் அப்பெண்ணை பணியில் நியமிக்க உத்தரவிட்டது.
Advertisement