புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியின் கியான்வாபி மசூதியில் முதல்நாளுக்கு பின் நிறுத்தப்பட்ட களஆய்வு, நேற்று மீண்டும் தொடங்கியது.
உ.பி. மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலும், கியான்வாபி மசூதியும் ஒட்டியபடி அருகருகே அமைந்துள்ளன. கோயிலை இடித்து அதன் ஒரு பகுதியில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கியான்வாபியை கட்டியதாகப் புகார் உள்ளது.
இதுதொடர்பான வழக்கு வாரணாசியின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் கியான்வாபி வளாகச்சுவரின் வெளிப்பகுதியில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது.
கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள இந்த கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்கக் கோரும் வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஆகஸ்டில் தொடுக்கப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த 5 பெண்களால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த வாரணாசியின் சிவில் நீதிமன்றம், கியான்வாபியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி, நீதிமன்றக் குழுவால் மே 6-ல் களஆய்வு தொடங்கி நடைபெற்றது. இதை மறுநாள் அனுமதிக்க மறுத்த முஸ்லிம்கள், களஆய்வின் ஆணையரான மூத்த வழக்கறிஞர் அஜய்குமார் மிஸ்ராவின் நோக்கம் சரியல்லை எனக் கூறி அவரை மாற்றவேண்டி வழக்கு தொடுத்தனர்.
இதை ஏற்க மறுத்த சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர், மேலும் 2 வழக்கறிஞர்களை ஆணையருக்கு உதவியாக நீதிமன்றம் சார்பில் அமர்த்தி கள ஆய்வை தொடர உத்தரவிட்டார். கள ஆய்வின் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவுக்கு உதவியாக நீதிமன்றம் உதவி ஆணையர்கள் விஷால் சிங், அஜய் பிரதாப் சிங் ஆகியோரை அமர்த்தியுள்ளது. இதற்கும் தடை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்ற மசூதி தரப்பினருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 8.00 மணிக்கு துவங்கிய கள ஆய்வு, நண்பகல் 12.00 மணிக்கு முடிவடைந்தது. இது மீண்டும் இன்று காலை 8.00 மணிக்கு தொடர உள்ளது. நேற்றைய ஆய்வின்போது மசூதியின் அடித்தளத்தில் மூடிக்கிடந்த 3 அறைகளும் திறக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டன. இவற்றின் மீது எழுந்த பிரச்சினையால் கடந்த ஜனவரி 4, 1993 அன்று மாவட்ட ஆட்சியரால் மூடப்பட்டது. இதில் ஒரு அறை வியாஸர் என்பவர் பயன்படுத்தியதால் எழுந்த பிரச்சினை மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இதன் காரணமாக, வழக்கு முடிந்த பின் திறக்கலாம் எனவும் அப்போதைய ஆட்சியர் உத்தரவிட்டார்.
எனவே, அப்போது முதல் சுமார் 30 வருடங்களாக மூடிக்கிடந்த மூன்று அறைகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. இன்றும் மசூதியில் தொடரும் ஆய்வு முடிக்கப்பட்டு அதன் அறிக்கை மே 17 -ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதன் பிறகே அந்த அறைகளில் என்ன இருந்தன என்பது தெரியும் வாய்ப்புகள் உள்ளன. இக்கள ஆய்வின் போது மனுதாரர் மற்றும் மசூதி நிர்வாகிகள் சேர்த்து மொத்தம் 52 பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சிங்காரக் கவுரி அம்மன் தரிசனப் பிரச்சினையால் நடைபெற்ற ஆய்வில் வேறுபல புதிய விவகாரங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன.