தாய்லாந்தில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பைனலில் இந்திய அணி, ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதுவரை 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங் மோதினர். ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லக்சயா சென் 8-21, 21-17, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21, 21-19 என, இந்தோனேஷியாவின் முகமது அஹ்சன், கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ ஜோடியை வீழ்த்தியது.
ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டீ மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 21-15, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.
பாட்மின்டனில் சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.