தமிழகத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசுப் பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும், வைகாசி முதல்நாள் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு மிதந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். கொரோனா தொற்றின் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளேயே சிரசுத் திருவிழா நடைபெற்றது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு திருவிழாவை வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்த் திருவிழாவில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மிளகு கலந்த உப்பை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதையடுத்து, சிறப்பம்சமான ‘சிரசு’ பெருவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று அதிகாலை 4 மணிக்குத் தாரை, தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. பின்னர், தரணம்பேட்டை முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிரசு ஊர்வலம் புறப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரமாக பவனிவந்த சிரசு காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாகக் கெங்கையம்மன் கோயிலைச் சென்றடைந்தது. சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தின்போது, அம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர்கள், பூமாலைகள் தூவி வரவேற்றனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். அமைச்சர்கள் துரை முருகன், சேகர்பாபு, எம்.பி-க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், அமலு விஜயன், கார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும், சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். இன்றிரவு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு கௌண்டன்ய மகா நதி வழியாகப் புங்கனூர் அம்மன் கோயிலை அடைகிறது. அப்போது, கௌண்டன்ய நதிக்கரையில் கண்ணைக் கவரும் சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும். இதையடுத்து, மீண்டும் முத்தாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் குடியாத்தத்துக்கு இயக்கப்பட்டுவருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.