எம்.பி ஆகும் 82 வயது கல்யாணசுந்தரம்: 2 ஏக்கர் நிலம் தானம் கொடுத்த குடும்ப வாரிசு

Life history of DMK Rajya shaba candidate Kalyanasundaram: நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று வேட்பாளர்களில் ஒருவரான எஸ்.கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவர் தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் உள்ளார். மேலும், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் தலைவராக பதவி வகிக்கிறார்.

கும்பகோணம் அருகேயுள்ள பம்பப்படையூர் கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் கடந்த 1940-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி பிறந்தவர். தற்போது வயது 82.

இவரது தந்தை சுந்தர்ராஜன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1952-ல் பம்பப்படையூரில் அப்போதைய முதல்வர் இராஜாஜி, காமராஜர், கக்கன், ஜி.கே.மூப்பனார் ஆகியோரை அழைத்து வந்து பூமிதான இயக்கத்திற்கு தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கியவர் இவரது தந்தை சுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத் தக்கது.

சுந்தர்ராஜனின் இரண்டாவது மகன் கல்யாணசுந்தரம். தந்தையைப் போலவே தன்னையும் பொது வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
இவரது குடும்பம் அக்காலத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டி வாண்டையார், உக்கடை தேவர், குன்னியூர் சாம்பசிவம அய்யர், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற குடும்பங்களை ஒத்த பாரம்பரியமும், செல்வாக்கும் பெற்றது ஆகும்.

தனது 16-வது வயதில் குடந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1958-1959 ல் 10-ம் வகுப்பு படித்துவந்த கல்யாணசுந்தரம், தந்தை பெரியாரின் பகுத்திறவு கொள்கையை ஏற்று சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கிட தனது படிப்பைத் துறந்து அறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தை முன்னெடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

மாணவர் போராட்டம் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கல்யாணசுந்தரம் திமுகவின் ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக 1972லிருந்து 1998 வரை ஐந்து முறை 27 வருடங்கள் தொடர்ந்து பொறுப்பு வகித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: வங்கி கிளார்க் பணி; தமிழ் தேர்ச்சி கட்டாயம் இல்லை: புதிய அறிவிப்பால் சர்ச்சை

அது தவிர, ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைராக (யூனியன் சேர்மன்) பதவி வகித்தார்.  1997-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவராக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். முத்துச்செல்வன் என்ற மகன் தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக உள்ளார்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.