பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கவுதம் னிவாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை- டெல்லி பட்டேல் நகர் இடையிலான பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வடகோவை ரயில்நிலையத்திலிருந்து நேற்று தொடங்கிவைத்தபிறகு ஏ.கவுதம் னிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ரயில் கோவை வடக்கு ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, டெல்லி படேல் நகர் ரயில்நிலையம் சென்றடையும். இதில் மொத்தம் 353 டன் சரக்குகளை ஏற்றிச்செல்ல முடியும். செல்லும் வழியில் திருப்பூர் வஞ்சிபாளை யம், ஈரோடு, சேலம், ரேனிகுண்டா,நாக்பூர் ஆகிய ரயில்நிலையங் களில் சரக்குகளை ஏற்றி, இறக்கு வதற்காக ரயில் நின்று செல்லும்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதி தொழில்நிறுவனங்கள் தங்கள் பொருட்களை டெல்லி, வட இந்திய சந்தைகளில் விற்பனை செய்ய இந்த ரயில் சேவை பயனளிக்கும்.
அதேபோல, தொழில்நிறுவனங் கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை டெல்லி யிலிருந்து இங்கு கொண்டு வரவும் இந்த ரயில் பயன்படும். சாலை மார்க்கமாக பொருட்களை எடுத்துச்செல்வதைவிடவும், இந்த ரயிலில் கட்டணம் குறைவு. குறிப்பிட்ட நேர அட்டவணைப்படி இந்த ரயில் இயக்கப்படுவதால், சாலையில் செல்வதைவிடவும் வேகமாக இந்த ரயில் சென்றடையும். இந்த ரயில் மூலம் தொழில்நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறேன்.
இந்த பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க தனியார் நிறுவனத்துடன் 6 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள் ளது. திருச்செந்தூர்-பாலக்காடு ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க இதுவரை எந்த முன் மொழிவும் இல்லை. பயணிகளின் கோரிக்கைகள் குறித்தும், ரயிலை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படும். மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான கோடைகால சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இருமார்க்கத்திலும் இருக்கைகளில் சராசரியாக 60 சதவீதம் நிரம்பிவிடுகின்றன. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை ரயில் நிலைய இயக்குநர் ராகேஷ் குமார் மீனா, சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் பிள்ளைகனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.