பெண்கள் தனித்து இயங்கும் திறன் அற்றவர்கள் என்கிற ஆணாதிக்க கண்ணோட்டமே காரணம் – கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சி.!

மண்டல கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் கலந்து கொள்ள கூடாது என்ற சென்னை மாநகராட்சி உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்தும், இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் செயலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (15.5.2022) கடிதம் அனுப்பியுள்ளார். 

அவரின் அந்த கடிதத்தில், “அண்மையில் சென்னை மாநகராட்சி, பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் நிலைக்குழு கூட்டங்களுக்கோ, மண்டல கூட்டங்களுக்கோ வருகை தரக் கூடாது என்ற முடிவை எடுத்திருப்பதாக ஊடக செய்தி வெளிவந்தது. இம்முடிவைப் பாராட்டுகிறோம். அனைத்து மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் சுயமாக இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதும், அவர்களது பணிகளை கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்வதை தடுப்பதும் மிக முக்கியமானது எனக் கருதுகிறோம்.

பெண்களுக்கு, கடந்த காலத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடோ, தற்போது உள்ள 50 சதவீத இட ஒதுக்கீடோ பெண்களை ஆளுமைப்படுத்துவதற்காகவும்,  நிர்வாக முடிவுகளை எடுக்கும் இடங்களில் செயலாற்ற வைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் என சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பெயருக்கு அவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களது பணிகளை எல்லாம் பினாமியாக தந்தையோ, கணவனோ, மற்றவர்களோ செய்வார்கள் என்றால் அந்நிலையை ஒருபோதும் ஏற்கக்கூடாது. ஒரு பகுதி பெண் கவுன்சிலர்கள் மட்டுமே சுயேச்சையாக செயல்படுகிற இன்றைய சூழலை வலுப்படுத்தி விரிவாக்க வேண்டும்.

ஆண் கவுன்சிலர்களின் உறவினர்கள் வருவதில்லை, வந்தாலும் அனுமதி இல்லை. அப்படியானால் இந்நிலைக்கு, பெண்கள் தனித்து இயங்கும் திறன் அற்றவர்கள் என்கிற ஆணாதிக்க கண்ணோட்டமே காரணமாக உள்ளது. இந்த மாயை உடைக்கப்பட வேண்டும்.

பட்டியலின, பழங்குடியின கவுன்சிலர்கள் வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு இடங்களில் இட ஒதுக்கீட்டின் காரணமாக பட்டியலின பழங்குடியின வேட்பாளர்களை சாதி ஆதிக்க, பொருளாதார ஆதிக்க சக்திகள், நிறுத்தி விட்டு வெற்றி பெற்றபின் அவர்கள் பெயரில் பினாமியாக செயல்படுகின்றனர்.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலைவர்கள் தவிர வேறு யாரும் கூட்டங்களுக்கு வருவதற்கு, அவர்களது பணிகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செய்வதற்கு அனுமதி இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்திட வேண்டும். இதனை மீறி மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களை செயல்பட அனுமதிக்கும் அதிகாரிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இதுகுறித்து, தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.