தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது
நாளை மாலை 5 மணி வரை இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவான மற்றும் பெல்மடுல்ல பிரதேசங்களுக்கு மூன்று கட்டங்களின் கீழ் விடுக்கப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான, இடங்களுக்கு வெளியேறுவதற்கான அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு.
இதேவேளை கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இரத்தினபுரி, அலபாத்த, கலவானை, களுத்துறை, மத்துகம, புலத்சிங்கள, அகலவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில பிரதேசங்களில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தப் பிரதேசங்களில் 82 வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 73 வீடுகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 600ற்கு மேற்பட்டதாகும். இதில் 585 குடும்பங்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டவையாகும். தெதுறு ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கைஇ களுகங்கைஇ பெந்தர கங்கைஇ ஜின்கங்கைஇ நில்வளா கங்கை மற்றும் கிரம ஓயா ஆகிய நதிகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களில் அனர்த்தம் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் கூடுலான கவனத்துடன் செயற்பட வேண்டும். தற்போது குக்குலே கங்கை, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மேல் மாகாண மற்றும் தென் மாகாண பிரதேசங்களில் 10 நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 நிவாரணக் குழுக்களும், புலத்சிங்கள மற்றும் பரகொட ஆகிய பிரதேசங்களில் ஒரு நிவாரண குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று தவலம, நாகொட பிரதேசங்களுக்கும் இரண்டு நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. களுத்துறை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கடற்படை ஈடுபட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நிவாரணங்களை வழங்குவதற்காக நாடு முழுவதிலும் மொத்தமாக 42 நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலி மாவட்டத்திற்கும் ஜின்கங்கை மேல் நீரேந்து பகுதிகளில் கடந்த 2 நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக ஜின்கங்கை – பத்தேகம பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.