அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி, கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா மே 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, அவிநாசி தேரோட்டம் 12, 13-ம் தேதிகளில் இரு நாட்கள் நடந்தது. இதையடுத்து நேற்று கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நடைபெற்றது. உடன் விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் ஆகிய தேர்களையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழந்தனர்.
கோவை பிரதான சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக வந்து மதியம் 1.45 மணிக்கு தேர்நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து இன்று (மே 15) வண்டித்தாரை, பரிவேட்டை, நாளை (மே 16) தெப்பத் தேர் உற்சவ நிகழ்ச்சியும், நாளை மறுதினம் (மே 17) நடராஜ பெருமான் மகா தரிசனம், வரும் 18-ம் தேதி காலை மஞ்சள் நீர், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, மயில் வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.