நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் விக்ரம் படத்தை தயாரிக்கிறார்.
வருகிற ஜூன் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வருகிற மே 15-ந்தேதி அன்று விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பத்தல பத்தல பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை காவல் ஆணையரகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், “கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்தல… பத்தல பாடல் வரிகைகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய வரிகளை இரு நாட்களில் நீக்கி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ராஜ்கமல் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.