பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மீரான் ஷா பகுதியில் நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 3 சிறுவர்களும் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இதனிடையே இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.