இயல்பு வாழ்க்கை முடக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கன மழை காரணமாக மேற்படி மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கி உள்ளது.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு மட்டுமின்றி, நிலச்சரிவும் மக்களுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. அங்குள்ள மலைப்பாங்கான மாவட்டமான திமா கசாவோவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
80 வீடுகள் சேதம்
குறிப்பாக பியாங்பை, மவுல்கோய், தெற்கு பகேதர், மகாதேவ் தில்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலச்சரிவு காரணமாக சுமார் 80 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. ரெயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதனால் சாலை போக்குவரத்தும், ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஜதிங்கா-ஹரங்கஜாவோ மற்றும் மகுர்-பைடிங் ரெயில்வே பாதைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் கவுகாத்தியின் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
25 ஆயிரம் பேர் பாதிப்பு
இந்த கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் அசாமில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சாசர் மாவட்டத்தில் மட்டுமே 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தீயணைப்பு துறையினர் போன்ற துறைகள் ஈடுபட்டுள்ளன. மேலும் இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட சுமார் 230 பேர் 10 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.