நெல்லை கல்குவாரி விபத்து – 3வது நபர் மீட்பு

திருநெல்வேலி அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில், சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை விரைந்துள்ள நிலையில், தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சங்கர நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. நேற்றிரவு அங்கு செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள், 2 லாரிகள் மற்றும் 3 கனரக ஹிட்டாச்சி வாகனங்களில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு, கற்கள் அள்ளும் பணி நடைபெற்ற பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், பாறை விழுந்த சத்தம் கேட்டு கல்குவாரியின் அருகிலிருந்தவர்கள், தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தடைந்த நிலையில், நள்ளிரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாததாலும், லேசான மழைப்பொழிவு இருந்ததாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அடுத்த ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு வீரர்களும் நீண்ட போராட்டத்துக்கு பின், முருகன் மற்றும் விஜய் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். மற்ற 4 பேரை மீட்கும் பணியில் நடைபெறும் நிலையில், ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஐஜி பர்வேஷ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து தொடர்பாக, கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளர் ஒருவர், கையை நீட்டி உதவிக்கு அழைத்த நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவர் மீட்கப்பட்டார்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

விபத்து குறித்து பேசிய ஆட்சியர் விஷ்ணு, குவாரியில் கற்கள் தொடர்ந்து சரிந்து விழுந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டதாகவும், குவாரியில் விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.