இதனால், வட கொரிய மக்கள் அச்சம்அடைந்துள்ளனர்.உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது.
இந்நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதாக, கடந்த வாரம் வட கொரியா அறிவித்தது. பலர், ‘ஒமைக்ரான்’ வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே 27 பேர், காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் பலியாகி உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 42 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல், 8.20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; அதில், 3.24 லட்சம் பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான சுகாதார உள்கட்டமைப்பை உடைய வட கொரியாவில், கொரோனா பரிசோதனைகளை செய்யும் வசதிகள் கூட சரிவர இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால், காய்ச்சலுக்கு உயிரிழந்தோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களா, இல்லையா என்பதை கூட அறிய முடியாத நிலை உள்ளது.மொத்தம், 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், கொரோனா தடுப்பூசிகள் இல்லாததால், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இதனால், வரும் நாட்களில், அதிக எண்ணிக்கையிலான மக்கள், கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.