புனே :
மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுமாறு மாநில அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார். இந்தநிலையில் அகமத்நகரில் நேற்று செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே கூறியதாவது:-
லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுவதாக முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசும், தற்போதைய மகா விகாஸ் அகாடி அரசும் உறுதியளித்தன. ஆனால் இதுவரை இந்த சட்டத்தை இயற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
லோக் அயுக்தா சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி நாங்கள் கடிதம் அளித்தோம். ஆனால் இந்த விஷயத்தில் முதல்-மந்திரி வாய்மூடி மவுனியாக இருக்கிறார். 2½ ஆண்டுகள் ஆகியும் லோக் அயுக்தா சட்டம் இயற்றப்படவில்லை.
இந்த அரசு தொடர்ந்து அமைதியாக இருப்பதால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியத்தை நான் காண்கிறேன். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்று லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது ஆட்சியில் இருந்து விலகுங்கள்.
லோக் அயுக்தா சட்டத்திற்காக போராட்டம் நடத்துவதற்காக மாநிலத்தில் உள்ள 200 தாலுகாக்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் உள்ள 35 மாவட்டங்களில் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.