“பெயருக்கு கொடுத்த மரியாதையை ஜெயலலிதா என்ற நபருக்கு கொடுக்கவில்லை!” – விளாசும் மா.சுப்பிரமணியன்

“ஓராண்டு தி.மு.க ஆட்சியின் சாதனைகளாக நீங்கள் எதைச் சொல்லுவீர்கள்?”

“கலை, அறிவியல் படிக்கும் பெண்களுக்கு 36 ஆயிரம், பொறியியல் படிக்கும் பெண்களுக்கு 48 ஆயிரம், மருத்துவம் படிக்கும் பெண்களுக்கு 60 ஆயிரம், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படிக்கும் பெண்களுக்கு 24 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் மூவலூர் ராமாமிருதம் திட்டம், லட்சக்கணக்கான பெண்கள் படித்துவிட்டு வரும்போது பெரியளவில் பொருளாதார முன்னேற்றம் என்பதையும் தாண்டி பெரிய சமூகப் புரட்சியே நடக்கும். உலகளவில் மருத்துவக்கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் கியூபாவில்கூட மக்கள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் மருத்துவம் வீடு தேடிச் செல்கிறது. இதன்மூலம் 66 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். வருமுன் காப்போம் திட்டத்தின்மூலம் 1260 கேம்ப்கள் நடத்தப்பட்டு 9.6 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். இப்படிச் சொல்வதற்கு இன்னும் நூறு திட்டங்கள் இருக்கின்றன”

– அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“ஆனால், மினி கிளினிக் நிறுத்தம், பெயர் மாற்றம் எனப் பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டனவே?”

“மினி கிளினிக் ஓராண்டு திட்டமாகத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக நியமிக்கப்பட்டவர்களிடம் பணி நிரந்தரம் கேட்கக் கூடாது எனக் கையெழுத்து வாங்கியே நியமித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பாத்ரூம், நிழற்குடை என எதெல்லாம் காலியாக இருந்ததோ அங்கெல்லாம் அம்மா மினி கிளினிக் என போர்டு மாட்டிவிட்டார்கள். அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் என்றார்கள். அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு பகுதியாக இருக்கும் இந்தத் திட்டத்துக்கு அம்மா திட்டம் என பெயர் வைத்திருக்கிறார்கள். மெரினாவைத் தூய்மைப்படுத்த 26 கோடியில் திட்டமதிப்பீடு செய்து கல்வெட்டு வைத்தோம். அதை அ.தி.மு.க ஆட்சியில் இடித்ததோடு கல்வெட்டு இருந்த இடங்களில் மரங்களை நட்டு அதற்கு அ.தி.மு.க பெயர் போட்டு கல்வெட்டு வைத்தார்கள். அதுமட்டுமல்ல ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் இவர்கள் கொண்டு வந்தார்கள். ஜெயலலிதா பெயரில் இருக்கும் மரியாதைகூட அந்த நபருக்குக் கொடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.”

“கட்சியினரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனம் குறித்து?”

“தி.மு.க என்று சொன்னாலே ஜனநாயக அமைப்பு என்பதுதான் பொருள். திமுக குறித்து சோ தனது பத்திரிகையில் கடுமையான விமர்சனங்கள் வைத்தவர். ஆனால், அவரே தி.மு.க ஒரு ஜனநாயகக்கட்சி எனக் கூறியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க-வில் முதலில் பொதுச் செயலாளாராக ஜெயலலிதாவைத் தேர்வு செய்துவிட்டு, நிர்வாகிகள் தேர்தல் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு அனைவரையும் அவரே நியமனம் செய்வார். ஆனாலும் தங்களை ஜனநாயக அமைப்பு என்பார்கள்.”

முதல்வர் மு.க.ஸ்டாலின்

“தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தலிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனவே?”

“தி.மு.க-வில் கிளை தொடங்கி தலைவர் பதவியை உரிய முறையில் தேர்தல் நடத்தித் தேர்வு செய்யப்படுவார்கள். கிளையில் ஓர் ஆதி திராவிடர் இருக்க வேண்டும், மகளிருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். துணைச் செயலாளர் இருவர், பொதுச் செயலாளர், அவைத்தலைவர் என நிர்வாகக் கட்டமைப்பு முறையாக இருக்க வேண்டும். இதில் இத்தனை ஆண்டுகாலமாக ஒரு சிறு சிதைவுகூட இருந்ததில்லை. கட்சியில் எந்தப் பதவியிலிருந்தாலும் தவறு செய்தால் உடனடியாகக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்திய அளவில் ஒரு மாநிலக் கட்சியில் இந்தளவு கட்டுக்கோப்புடன் இருப்பது தி.மு.க மட்டும்தான்.”

“திராவிட மாடல் என்ற பெயரில் விளம்பர ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?”

“அ.தி.மு.க-வினர் விளம்பரமே செய்யாமலா ஆட்சி செய்தார்கள். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசேர்க்க, புரிய வைக்க, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. நான் மாரத்தான் ஓடுவதை எப்போதும் எங்கிருந்தாலும் சமூக வலைதளங்களில் லைவ் செய்வேன். நான் ஒரு சர்க்கரை நோயாளி, என்னுடைய மூட்டு உடைந்து, நெற்றி உடைந்து ‘சுப்பிரமணியன் கவலைக்கிடம்’ என செய்தி வெளியானது. என்னால் இனி ஓடவே முடியாது மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், இவற்றைப் பொய்யாக்கி, லண்டன், இத்தாலி என 12 நாடுகள், இந்தியாவின் 22 மாநிலங்களில் என இதுவரை 125 மாரத்தான்கள் ஓடியிருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் ஒருமணி நேரமாவது மாரத்தான் ஓடி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன்.”

மா.சுப்பிரமணியன்

“உங்களுக்கு சரி ஆனால், முதல்வர் செய்யும்போதுதான் அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?”

“என்னைச் சந்திக்கும் பெரும்பாலானவர்களில் என் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசுவதைவிட என்னைப் பார்த்து உடற்பயிற்சி செய்தோம், ஓடினோம் என்பார்கள். அதுதான் எனக்கு உற்சாகத்தையும் கொடுக்கும். இதை விளம்பரம் என்பீர்களா? இல்லை இது விழிப்புணர்வு. முன்பெல்லாம் பணம் வைத்திருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டவர்கள், இப்போது நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். என்னை பார்த்தே பலரும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும்போது முதல்வரைப் பார்த்து எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த விழிப்புணர்வு போய்ச் சேரும். இது கூடப் புரியாமல் இவர்களெல்லாம் என்ன அரசியல் செய்கிறார்கள்?”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.