பட்டாம்பூச்சி Exclusive: "சைக்கோ திரில்லர் vs அலட்சிய போலீஸ் – இதை ஏன் பீரியட் படமா எடுத்தோம்னா…"

இயக்குநர் சுந்தர்.சி-யின் அலுவலகத்தின் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே நடிகர் ஜெய், இயக்குநர் பத்ரி எனக் கூடியிருக்கிறார்கள். சுந்தர்.சி-யின் தயாரிப்பில் த்ரில்லராக `பட்டாம்பூச்சி’ சிறகடிக்கக் காத்திருக்கிறது.

“இத்தனை நாள் நான் சம்பாதிச்சதில் அவ்னி பேனரும் முக்கியமானது. என் தயாரிப்பில் வந்த படங்கள் என்னையும் என் பேனரையும் காப்பாத்தி வந்திருக்கு. ‘அரண்மனை’ மாதிரியான படங்கள் தாண்டி, ரொம்பவும் செலக்ட் செய்துதான் நடித்தும் தயாரித்தும் வந்திருக்கேன். இந்த ‘பட்டாம்பூச்சி’ கதை சொல்லும் போதே கவர்ந்தது. இயக்குநர் பத்ரி இதற்கான நியாயங்களை வைச்சிருந்தார். ஒரு கதை அதன் அளவில் எனக்கு புதிதாகவும் பிரமிப்பாகவும் இருந்தது” – ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் சுந்தர்.சி.

பட்டாம்பூச்சி

“இது 80களில் நடக்கிற கதை. தான் செய்யாத தப்புக்கு மாட்டிக்கொள்கிற சைக்கோ திரில்லரின் கதை. தான் பார்க்கிற வேலையில் ஆர்வமோ ஒட்டுதலோ இல்லாமல் இருக்கிற ஒரு போலீஸ் ஆபீஸர். இவங்களுக்கு இடையில் வருகிற மோதல்தான் படத்தின் சாராம்சம். மனசுக்குள் பத்ரி சொன்ன கதை ஓட ஆரம்பிச்சதும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிச்சது. அதில் ரொம்பவும் கச்சிதமாக பொருந்திய முகம் ஜெய். குழந்தை மூஞ்சியில் ஒரு கொலைகாரனை படத்தில் கொண்டுவருவது ரொம்ப கஷ்டம். ஜெய் அதற்கு சரியாக வந்தார்.

ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் அவரது மென்மை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அவரை ஒரு நெகட்டிவ் கேரக்டரில் காண்பிக்கும் போது எல்லோருக்கும் எப்படின்னு ஒரு ஆச்சரியம் பரவ ஆரம்பிக்கும். உங்களை சுறுசுறுப்பாக சீட் நுனியில் வைக்கக்கூடிய படத்தில் ஜெய் பெரிய பலமாக வந்திருக்கார். ‘கலகலப்பு 2’வில் நான் அவர் கூட ஒர்க் பண்ணியிருக்கேன். அவரின் நடிப்புத் திறமை எனக்குப் பிடிக்கும். எளிதாக ஒரு விஷயத்தைக் கடினம் இல்லாமல் காட்டிவிடுவார். அவரின் நடிப்புத் திறமைக்கு இதில் நல்ல வேலை. ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவங்களோட சௌகரியமான இடத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்து பார்க்கணும்னு ஆசை வரும். அந்த இடத்தில் ஜெய் இருக்காரான்னு தெரிஞ்சுக்க நினைத்தேன்…” – ஒரு கணம் நிறுத்தி, ஜெய் பக்கம் பார்க்கிறார்.

பட்டாம்பூச்சி

“எனக்கு சார் மேலே எப்பவும் நம்பிக்கை. அவரை நம்பி குறைஞ்சு போனவங்க யாரும் இங்கே இல்லை. அவரோட பதறாமல், நிதானமாக வேலை பாக்க முடியும். சூழலைக் காட்டி, எமோஷன் சொல்லி அவர்கள் போக்குக்கு விட்டு நடிப்பைக் கொண்டு வருவார்.

பத்ரி சார் கதை சொன்னதும் எனக்கு இதை செய்ய முடியுமான்னு சந்தேகம் வந்தது. ஆனால் சுந்தர்.சி நம்பிக்கைக் கொடுத்தார். அப்புறம் அடுத்த கட்டம் நகரணும்னு எனக்கே விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கு சரியான உழைப்பு வேண்டியிருந்தது. சுந்தர் சாருக்கும் எனக்கும் நடக்கிற மானசீகமான போராட்டம்தான் கதை. நேரடி அடிதடியை விட இதில் சுவாரஸ்யம் அதிகம். அது அருமையாக, ரசிக்கிற மாதிரியும் அடுத்தடுத்து பதற்றம் கூட்டுவது மாதிரியும் திரைக்கதையா வந்திருக்கு.

வெயிட்டான விஷயத்தை அந்த வெயிட் தெரியாமல் லேசாக்கி கொடுக்கிறதுதான் இந்த ‘பட்டாம்பூச்சி’யின் வடிவம். படத்தில் சுந்தர் சார் என்னைத் தொடர ஆரம்பிச்ச பிறகு எனக்கான வேகம் எப்படி ஆரம்பிக்கிறது, எப்படிப் பிரச்னை தீருகிறது என்பதுதான் விஷயம். சுந்தர் சார் மாதிரி அனுபவசாலி கவனத்தோட செய்து, நாங்க நடிச்சதால வெளிச்சத்தை அள்ளி பூசின மாதிரி படமே வேறு விதத்தில் வந்திருக்கு. நீங்க என்ன சார் நினைக்கிறீங்க?” – இயக்குநர் பத்ரியின் பக்கம் தலையைச் சாய்க்கிறார் ஜெய்.

“எனக்கு இப்ப மாறிக்கொண்டு வருகிற மலையாள சினிமா பிடிச்சிருக்கு. இங்கே படைப்பாளிகளுக்கு முதல் தேவை சுதந்திரம். கிரியேட்டரே தயாரிப்பாளராக இருக்கும்போது இந்தச் சுதந்திரம் ரொம்ப இயல்பாக கிடைக்குது. சொல்லப்போனால் சார்கிட்டேயிருந்து பணம் வாங்கி என் சொந்தப் படம் மாதிரி எடுத்திருக்கேன். நான் இந்த ஸ்கிரிப்டை அவர்கிட்டே சொல்லும் போதே அவருக்குப் பிடிச்சுப் போச்சு. நல்ல கரெக்ஷன்களை அவர் சொன்னதும் அதையும் கணக்கில் எடுத்துக்கிட்டேன்.

எனக்கு இப்ப வந்த `டிரைவிங் லைசன்ஸ்’, `அய்யப்பனும் கோஷி’யும் ரொம்பப் பிடிச்சது. இரண்டே இரண்டு கேரக்டர்கள் அவர்களுக்கு இடையேயான போராட்டங்கள் என செம ஸ்கிரிப்ட்டாக அவை இருந்தன.

பட்டாம்பூச்சி

ஒரு முழு படத்தையும் அந்த இரண்டு பேரும் தாங்கிக் கொண்டு இருந்தாங்க. இது மாதிரி தமிழில் ஏன் முடியாதுன்னு யோசிச்சபோது, இந்த ஸ்கிரிப்ட் தோன்ற ஆரம்பித்தது. எனக்கு ஜெய் சம்மதிப்பாரான்னு பயம். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பிறகு அவரே தினமும் அந்த கேரக்டர் பத்தி என்னிடம் போன் பண்ணி கேட்க ஆரம்பிச்சிட்டார். இரண்டு பேரோட போராட்டம் பார்க்க பார்க்க நல்லா இருக்கும். படத்தில் சுந்தர்.சிக்கும் அவருக்குமான இடம் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதை கேமராமேன் கிச்சா மூலம் நல்ல விஷுவலாக எடுத்துக் காட்டியிருக்கோம்.

இப்ப இருக்கிற நவீன காலத்தில் குற்றவாளிகள் பெருகிட்டாங்க. ஆனால், அதே சமயம் நவீன கருவிகள், கேமராக்கள் கொண்டு கவனிச்சா அவங்க சீக்கிரம் மாட்டிக்குவாங்க. அதனால் கதை நடக்கிற காலத்தை 80-களுக்கு மாற்றினோம். அந்தச் சமயம் அவ்வளவு கேமராக்கள் இல்லாத காரணத்தினால் போலீஸ் ரொம்ப கஷ்டப்பட்டது. கிரிமினல்கள் சத்தமில்லாமல் தப்பிச்சாங்க. முன்னாடி எல்லாம் ரொம்ப மூளையை கசக்கித்தான் குற்றத்தைக் கண்டுபிடிக்கணும்.

என்ன, இப்போ இருக்கிற கார், செல்போன் டவர்ஸ், நாம போட்டுட்டுத் திரிகிற மாஸ்க், இதை எல்லாம் மறைச்சு படம் எடுக்கிறதுதான் பெரும் வேலையாக இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஒரு நல்ல படம் காட்சிக்கு வந்திருக்குன்னு நினைக்கிறேன்” – நம்பிக்கையாகப் பேசுகிறார் இயக்குநர் பத்ரி.

பட்டாம்பூச்சி

“சொல்லப்போனால், கதை சொல்ற பாட்டிகள் இப்ப இல்லை. இன்னைக்கு சினிமா மட்டும்தான் கதை சொல்லிக்கிட்டு இருக்கு. ஒரு தியேட்டருக்குள் என்னை மதிச்சு இரண்டரை மணி நேரம் உட்காரும் ரசிகனுக்கு முதலில் நான் மரியாதை கொடுக்கணும். தன் நேரத்தை பணத்தைச் செலவு பண்ணி தியேட்டருக்கு வருகிற அவர்களால்தான் சினிமா வாழுது. அந்தப் பொறுப்பு உணர்வு இயக்குநருக்கு இருக்கணும். எங்களுக்கு அந்தக் கடமை இருக்கணும். ‘பட்டாம்பூச்சி’ ஒரு நல்ல காட்சி அனுபவத்தை தரும்” எனச் சொல்லும் சுந்தர்.சி-யின் கண்களில் மின்னுகிறது கனவு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.