ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 10,000-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில் முக்கியமானதாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலின் மூலம் நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அண்மைக்காலமாக பஞ்சு விலை அதிகரிப்பால் நூலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜவுளி சங்கங்கள் பல முறை கடையடைப்பில் ஈடுபட்ட போதிலும் பஞ்சின் விலை மேலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஈரோட்டில் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் தினசரி மற்றும் வார ஜவுளி சந்தைகள், மொத்த மற்றும் சில்லறை ஜவுளி கடைகள் என சுமார் 10 ஆயிரம் ஜவுளி கடைகளை அடைத்துள்ளனர்.
இதனால் சுமார் 200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நூலின் விலை அதிகரித்துக்கொண்டே இருந்தால் ஜவுளி தொழிலை விடுத்து வேறு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கடையடைப்பிற்கு 25 க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் கலந்துகொண்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சை சேர்க்கவேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக இதேபோல நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கி இருந்தனர். இதனால், கரூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுமென கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் சுமார் 300 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்படுமென கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க… நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்
தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM