நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 இடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வருகிற 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளார். நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் வருகிற ஜூம் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில
பாஜக
குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்
கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். அடுத்த மாதம் கர்நாடக மாநிலத்தில் 5 இடங்கள் மாநிலங்களவைக்கு காலியாகவுள்ளது. அதில் ஒரு இடத்திற்கு நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2014 முதல் 2016 வரை ஆந்திர மாநிலத்தில் இருந்தும், அதற்கு பிறகு 2016ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார். மேலும் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017-19 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த அவர், 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.