புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல்ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுஷீல்சந்திராவின் பதவிக் காலம் நேற்றுமுன்தினத்துடன் முடிந்தது. பணியில் இருந்து சுஷீ்ல் சந்திரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலம் முடிந்ததையடுத்து, தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். 15-ம் தேதி (நேற்று) அவர் பதவி பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது 62 வயதாகும் ராஜீவ் குமார், 1984-ம் ஆண்டின் ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வுவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார்.
தற்போது நாட்டின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றபின் செய்தியாளர்களிடம் ராஜீவ் குமார் கூறியதாவது:
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தை செழுமைப்படுத்துவது மக்களின் கருத்தையும் விருப்பத்தையும் அறியும் தேர்தல். இந்திய அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள மிகச் சிறந்த அமைப்பு தேர்தல் ஆணையம். நமது ஜனநாயகத்தை வளமிக்கதாக ஆக்கும் தேர்தலை நடத்தும் சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பை எனக்கு கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன்
கடந்த 70 ஆண்டுகால சுதந்திரஇந்தியாவில் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை மேலும்எளிமையாக்கவும் வாக்காளருக் கான சேவைகளை எளிதாக்கவும் மேலும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தல் தொடர்பாக பெரிய அளவில் சீர்திருத்தங்கள் இருந்தால் அதுகுறித்து ஜனநாயக ரீதியில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுகருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும். அரசியல் சாசனத்தின் கீழ்தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புள்ள விஷயங்களில் கடினமான முடிவுகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் தயங்காது.
இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்தார்.