கலிபோர்னியா:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பல்லோ நகரில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தலைகவசம் மற்றும் கவச உடை அணிந்து நுழைந்த 18 வயதான வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டான்.
இந்த துப்பாக்கி சூட்டில்10 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் வகையில் அவன் கேமராக்களை பொருத்தி இருந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது அடங்குவதற்குள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இதில் ஒருவர் இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவனிடம் இருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.