சென்னை: 2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.131 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-யும் ஒன்றாகும். சென்னை ஐஐடி ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சிஎஸ்ஆர் திட்டத்தில் நிதியை திரட்டும். இதன்படி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.131 கோடி நிதியை சிஎஸ்ஆர் திட்டத்தில் சென்னை ஐஐடி திரட்டியுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 சதவீதம் அதிகம் என்றும், நன்கொடை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது குறித்து முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் துறை டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் தங்களின் நேரத்தையும், பணத்தையும் இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செலவிடுவது மிகச் சிறப்புடையதாகும். இக்கல்வி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்தக் குழுவினரின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கரோனா நிவாரண திட்டங்களுக்காக சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களிடமிருந்து ரூ.15 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநில அரசுகளுக்கு வெண்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம் போன்ற அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.