“காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்” என்று காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு லஷ்கர் – இ – இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காஷ்மீரில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக 1990-களில் தீவிரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்காோர் உயிர் பிழைப்பதற்காக வெளி மாநிலங்களுக்கு தப்பிச் சென்று அகதிகளாக மாறினர். இதனிடையே, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளை மீள் குடியமர்வு செய்வதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. அதன்படி ஏராளமான காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரில் குடிபெயர்ந்து வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக குடியிருப்புகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது.
இந்த பின்னணியில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு காஷ்மீர் பண்டிட் குடியிருப்புக்கு இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. லஷ்கர் – இ – இஸ்லாம் தீவிரவாத அமைப்பு அனுப்பிய அந்தக் கடிதத்தில், “காஷ்மீரில் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என காஷ்மீர் பண்டிட்டுகள் விரும்புகின்றனர். எனவே காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு இனி இடம் கிடையாது. நீங்களாக காஷ்மீரை விட்டு வெளியேறி விடுங்கள் அல்லது சாகத் தயாராகுங்கள். உங்கள் பாதுகாப்பபை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கொல்லப்படுவது நிச்சயம்” என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அனைத்து பண்டிட் குடியிருப்புகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM