பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- காங்கிரஸ் சார்பில் எம்.பி. ஆகப்போவது யார்?

சென்னை:

பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. போட்டியிடும் 3 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். காங்கிரசில் யார் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விசுவநாதன், தகவல் திரட்டும் பிரிவு பொறுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி உள்பட பலர் வாய்ப்புக்காக காய்நகர்த்தி வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற உதய்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தேர்தலில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி செய்திருந்தால் விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற பிரிவால் ப.சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி 3 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் வழங்க கட்சி மேலிடம் முன் வந்தது. ஆனால் கட்சிப்பணி, தேர்தல் பிரசாரம் காரணமாக அவர் போட்டியிட விரும்பவில்லை.

மேலும் எம்.பி. தேர்தலில் 9 இடங்களில் வெற்றி, எல்.எல்.ஏ. தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி என்ற சாதனையும் இருக்கிறது.

முன்னாள் எம்.பி. விசுவநாதன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். மேல்சபை தேர்தல்களில் தலித் சமூகத்திற்கு இதுவரை தமிழகத்துக்கு பிரதிநிதித்தவம் வழங்கப்படவில்லை என்பதை முன்வைத்து வாய்ப்பு கேட்கிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி அகில இந்திய காங்கிரஸ் தகவல் திரட்டும் பிரிவில் பொறுப்பாளராக இருக்கிறார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர். டெல்லியிலேயே இருப்பதால் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். அந்த செல்வாக்கின் அடிப்படையில் அவரும் முயற்சிக்கிறார்.

டெல்லி மேலிடம் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்று பரிசீலித்து வருகிறது. மீண்டும் ப.சிதம்பரம் தேவை என்று கருதினால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இல்லாத பட்சத்தில் மற்றவர்கள் பெயர் பரிசீலிக்கப்படும். உதய்பூரில் இருந்து தலைவர்கள் இன்றுதான் டெல்லி திரும்பி இருக்கிறார்கள். எனவே வேட்பாளரை இறுதிசெய்ய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.