“தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலை; உடனடி நடவடிக்கை தேவை!" – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதற்கு, ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நூல் விலை இந்த மாதம் கிலோ ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.470-ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பின்னலாடைத் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் 2 நாள்கள் கடையடைப்பு போராட்டத்தை இன்று தொடங்கின.

இந்த நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியிருக்கிறார்.

ஸ்டாலின், மோடி

இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும், நிலைமை சீரடையாத காரணத்தால் பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழல் தமிழகத்தில் ஜவுளித் தொழிலுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆடை உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இது பாரம்பர்யமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் துறையில் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத் துறையில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நூலை கொள்முதல் செய்ய முடியாததால், துணி நெசவு செய்வதற்கும் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

அதனால், உடனடி நடவடிக்கையாக பருத்தி மற்றும் நூலுக்கான இருப்பு தொடர்பான அறிவிப்பினை அனைத்து நூற்பாலைகளுக்கும் கட்டாயமாக்கப்படலாம். இதன்மூலம் பருத்தி வியாபாரிகள் பருத்தி மற்றும் நூல் கிடைப்பது குறித்த உண்மையான தரவுகளைப் பெற முடியும்.

ஒன்றிய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் 30, 2022 வரை தள்ளுபடி செய்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு சரக்குகள் இந்தியத் துறைமுகங்களை வந்தடைய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், இறக்குமதி வரி விலக்கு 2022, ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். எனவே, செப்டம்பர் 30 வரை உள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் இறக்குமதி வரி விலக்கு கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெளிவான விளக்கங்களை வழங்கலாம். எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.